வடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


வடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Oct 2017 2:30 AM IST (Updated: 6 Oct 2017 6:29 PM IST)
t-max-icont-min-icon

வடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் நேற்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இட்டமொழி,

வடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் நேற்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மரத்தடி நிழலில் வைத்து மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது.

மேற்கூரையில் பாம்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200 மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள 10–ம் வகுப்பு அறையின் மேற்கூரை ஓட்டில் வி‌ஷப்பாம்பு ஒன்று நெளிந்துள்ளது.

இதனை பார்த்ததும் அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவ–மாணவிகளும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். ஏணி வைத்து ஏறி, வகுப்பறையின் ஓடுகளை பிரித்து தேடி பார்த்தபோது, பாம்பை காணவில்லை. இதனால் தீயணைப்பு படைவீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

கட்டுவீரியன் ரகம்

பின்னர் சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்குள் ஒரு ஆசிரியர் சென்று பார்த்தபோது, மீண்டும் பாம்பு நெளிந்துள்ளது. இதுகுறித்து மீண்டும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்களும் வந்து பார்த்தனர். மேலும் தீயணைப்பு படையினரும் மீண்டும் வந்து தேடி பார்த்தனர். ஆனால் பாம்பை காணவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் புறப்பட்டுச் சென்று விட்டனர். அந்த பாம்பு கட்டுவீரியன் ரகத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது.

மரத்தடி நிழலில் பாடம்

பள்ளி வளாக காம்பவுண்டு சுவர் அருகே உடைமரங்கள் வளர்ந்துள்ளதால், அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே பள்ளிக்கூடத்தில் பாம்பு ஒன்றை பிடித்து அடித்துக் கொன்றனர். இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கூட வகுப்பறைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால், 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு நேற்று மரத்தடி நிழலில் வைத்து பாடம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story