மத்திய அரசின் திட்டத்தில் சேர விழிப்புணர்வு வேன் பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


மத்திய அரசின் திட்டத்தில் சேர விழிப்புணர்வு வேன் பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Oct 2017 3:00 AM IST (Updated: 6 Oct 2017 6:33 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் இந்த திட்டத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு வேன் பிரசாரத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

நெல்லை,

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வு வேன் பிரசாரத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி

18 வயது முதல் 35 வயது நிரம்பிய கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச திறன் பயிற்சியை மத்திய அரசு அளிக்கிறது. வேலை இல்லாத இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியுடன் ஆங்கிலம் மற்றும் கணினி பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த திட்டம் தமிழ்நாட்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. ‘என் திறமை, எனது அடையாளம்‘ என்ற தலைப்பிலான இந்த திட்டத்தில் சேருவதற்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்களில் 85 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் இந்த திட்டத்தில் இளைஞர்கள் சேருவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேன் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று கொடியசைத்து பிரசார வேனை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, உதவி கலெக்டர் (பயிற்சி) இளம்பகவத், மகளிர் திட்ட இயக்குனர் ஹெப்சி லீமா, உதவி திட்ட இயக்குனர் அருண்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமம், கிராமமாக...

தொடர்ந்து கிராமம், கிராமமாக வேன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கொங்கந்தான்பாறை, நடுவக்குறிச்சி. அரியகுளம், பாளையஞ்செட்டிகுளம், செங்குளம், கானார்பட்டி, துலுக்கர்குளம், கருங்காடு, தேவர்குளம் உள்ளிட்ட 30 கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கிராமிய குழுக்களின் கலைநிகழ்ச்சியுடன் பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசின் திட்டம் பற்றி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. வருகிற 10–ந்தேதி வரை பிரசாரம் செய்யப்படுகிறது.


Next Story