வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி


வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் இறந்ததையடுத்து முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியளில் ஈடுபட்டனர்.

வாணாபுரம்,

வாணாபுரத்தை அடுத்த வெறையூர் அருகே உள்ள சு.கம்மம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலுடன் வீட்டிற்கு வந்த மணிகண்டனை, அவரது பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் மர்ம காய்ச்சல் சரியாகா ததால் நேற்று முன்தினம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டனுக்கு சரியான முறையில் டாக்டர்கள் என்ன நோய் என்று கண்டறியாமல் சிகிச்சை அளித்து வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் மணிகண்டன் உயிரிழந்தார் என்று கூறி வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்றால் முறையான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்று கோஷமிட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரதிற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story