சங்கராபுரம் அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
சங்கராபுரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கராபுரம்,
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 2 மாதத்தில் சின்னசேலம் காந்திநகர் மணிகண்டன் மகன் விஷ்ணுபிரியன்(6), சங்கராபுரம் அமுதா(35), கள்ளக்குறிச்சி வ.உ.சி.நகரை சேர்ந்த கிருஷ்ணன்(34) உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:–
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 27), கூலி தொழிலாளி. இவர்களுக்கு சந்தோஷ்(9) என்ற மகனும், அனுஷா(7) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியம்மாளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சோழம்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கன்னியம்மாளுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கன்னியம்மாளை சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கன்னியம்மாளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கன்னியம்மாள் டெங்கு காய்ச்சலுக்குரிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு கன்னியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து சின்னதம்பி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது.