ஓய்வூதிய தொகை வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் கைது
சின்னசேலம் அருகே ஓய்வூதிய தொகை வழங்குவதற்காக, ரேஷன் கடை ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவர், செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்துக்கு உட்பட்ட தென்செட்டியந்தல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் (வயது 61) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2014–ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக கணேசன், தெங்கியாநத்தத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று விண்ணப்பித்திருந்தார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூதிய தொகை கேட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று வந்தார். இருப்பினும் அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கான ஓய்வூதிய தொகையை வழங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ்(40), செயலாளர் பெருமாள்(52) ஆகியோர் கணேசனிடம் ஓய்வூதிய தொகையான 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கூறினர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி நேற்று காலை 11 மணி அளவில் கணேசன் தெங்கியாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்றார்.
பின்னர் அவர் போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை அங்கிருந்த கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் பெருமாள் ஆகியோரிடம் கொடுத்தார். அந்த பணத்தை அவர்கள் வாங்கியதும் அலுவலகத்தின் வெளியே தயாராக நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சண்முகம் மற்றும் போலீசார் செல்வராஜ், பெருமாள் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.