விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு நோய்பாதிப்பு அடைந்தவர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் டாக்டர்களை நியமிக்க சுகாதாரத்துறை இணைஇயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும் தரமான நவீன சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆஸ்பத்திரியில் பல்வேறு நவீன மருத்துவகருவிகளை வழங்கி உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி உள்ளது.

ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு டாக்டர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் தோல்நோய், நரம்பியல்நோய், புற்றுநோய் போன்ற சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இங்கு நியமிக்கப்படும் சிறப்பு தகுதி பெற்ற பல டாக்டர்கள் பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே இங்கு இருந்து மாறுதல் பெற்று சென்று விடும் நிலையும் இருந்து வருகிறது.

இந்த ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் வழக்கமாக தினமும் 500 பேர் சிகிச்சைக்காக வந்து செல்வது உண்டு. ஆனால் தற்போது டெங்கு பாதிப்பால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிறப்பு சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு அதிக எண்ணிக்கையில் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் வருகை தரும் நிலை உள்ளது. சில நாட்களில் 800–க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் அதிகரித்துள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு டாக்டர்கள் நியமிக்கப்பட வில்லை. ஏற்கனவே பணியில் இருந்து டாக்டர்களும், அயல்பணி காரணமாக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் இங்குள்ள வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலேயே டாக்டர்கள் உள்ளனர். இதனால் சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலையே ஏற்படுகிறது. சில நேரங்களில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு நேரம் முடிந்து விட்டது என கூறி நோயாளிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலையும் தொடர்கிறது.

மேலும் தமிழக அரசு, அரசு ஆஸ்பத்திரிகளில் முதியோருக்கு என தனி சிகிச்சை பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளபோதிலும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இந்த பிரிவு தொடங்கப்படவே இல்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் முதியோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் சில முதியோர் மயக்கம் அடைந்துவிடும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்வதுடன், வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்கவும், முதியோருக்கு என தனி சிகிச்சை பிரிவு தொடங்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story