கர்ப்பத்தை கலைத்து தவறான சிகிச்சை அளித்த பெண் டாக்டருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து தவறான சிகிச்சை அளித்த பெண் டாக்டருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
தாமரைக்குளம்,
அரியலூரில் உள்ள கே.கே.நகரில் வசித்து வருபவர் செந்தில்வேல். இவருடைய மனைவி பெருமாள் தாய் (வயது 35). கடந்த 2010 –ம் ஆண்டு இவருக்கு ரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், வீட்டிற்கு அருகிலுள்ள ஏ.கே.எம். மருத்துவமனை நடத்தி வரும் அரசு பெண் டாக்டர் காஞ்சனாவிடம் சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் காஞ்சனா, வயிற்றில் கரு உருவாகியுள்ளது என்று தெரிவித்து, மருந்து மாத்திரைகளை கொடுத்துள்ளார். ஆனால் மருந்து மாத்திரைகளை சாப்பிட்ட போதும் தொடர்ந்து ரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெருமாள் தாய், மீண்டும் டாக்டர் காஞ்சனாவை சந்தித்து வயிற்றுவலி குறித்து தெரிவித்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர் காஞ்சனா, வயிற்றில் கரு சரியாக உருவாக வில்லை, ஆகவே உடனடியாக கருவை கலைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பெருமாள்தாய் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து டாக்டர் காஞ்சனா 27.11.2010–ம் ஆண்டு பெருமாள் தாயின் கருவை கலைத்து, அவரது சிறுநீர் மற்றும் ரத்தம், சிறிது தசைகளை எடுத்து ஆய்வுக்காக திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு அனுப்பினார்.
இந்நிலையில் கடந்த 30.11.2010 அன்று டாக்டர் காஞ்சனாவை சந்தித்த பெருமாள்தாய், எனக்கு முன்பை விட வயிற்று வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவர், இனி வலி இருக்காது என்று கூறி மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பி உள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி நிற்கவில்லை.
இதையறிந்த பெருமாள் தாயின் தந்தை, அவரை திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பெருமாள்தாய்க்கு தவறான சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும், ஆபத்தான நிலையில் இருப்பதால் வயிற்றில் உள்ள கருப்பை குழாயை உடனடியாக அகற்றுமாறும், அதற்கு சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், டாக்டர் காஞ்சனாவை சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளை கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என கூறி பல நாட்களாக இழுத்தடித்துள்ளார்.
இது குறித்து செந்தில்வேல், அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் தொடர்ந்தார். இந்த வழக்கை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து, தவறான சிகிச்சையளித்த டாக்டர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெருமாள்தாய்க்கு ரூ.10 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில், ஒரு அரசு டாக்டர் ஒருவர் ஏ.கே.எம். மருத்துவமனை என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை கண்காணிக்காத பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குனரகம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் செந்தில்வேலுக்கு ரூ.1 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தொகை செலுத்தும் தேதிவரை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.