வளர்ப்பு மகனை கொலை செய்து உடலை புதைத்தவர் கைது
காட்கோபரில் 3 வயது வளர்ப்பு மகனை கொலை செய்து உடலை புதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நாசிக்கை சேர்ந்த இளம்பெண் அப்சானா (வயது25). திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மும்பைக்கு வேலை தேடி வந்தார். அப்போது ரெயிலில் அவருக்கு காட்கோபரை சேர்ந்த நித்தின் பட்டாரே (36) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது.அவரிடம் தனது நிலைமையை அப்சானா கூறினார். அவர் தன்னுடன் வந்தால் உன்னையும், குழந்தைகளையும் பார்த்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அப்சானா தனது 5 வயது மகள் மற்றும் 3 வயது மகன் அகில் ஆகியோருடன் நித்தின் பட்டாரேயுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அப்சானா வெளியில் சென்றிருந்தார். அப்போது அவருக்கு போன் செய்த நித்தின் பட்டாரே திடீரென சிறுவன் அகில் வீட்டில் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்சானா பதறி அடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.அவரிடம் போலீசுக்கு தெரிந்தால் பிரச்சினையாகும். எனவே யாருக்கும் தெரியாமல் அகிலின் உடலை புதைத்து விடலாம் என நித்தின் பட்டாரே கூறியுள்ளார். இதற்கு அப்சானாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் அவனது உடலை கல்யாண் பகுதிக்கு கொண்டு சென்று புதைத்து உள்ளனர்.
இந்த நிலையில், அகில் தெரியாமல் வீட்டில் இருந்த ஒரு கிளாசை உடைத்து விட்டதால் அவனை நித்தின் பட்டாரே அடித்து கொன்று விட்டதாக அப்சானாவிடம் அவரது மகள் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் நித்தின் பட்டாரேவை சத்தம் போட்டார்.இதனால் கோபம் அடைந்த அவர் அப்சானாவையும், அவரது மகளையும் சரமாரியாக தாக்கி உள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களின் உதவியுடன் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து அப்சானா பந்த் நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தின் பட்டாரேவை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 9–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் புதைக்கப்பட்ட சிறுவன் அகிலின் உடலை தோண்டி எடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.