ரெயில் நிலையங்களில் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை


ரெயில் நிலையங்களில் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2017 5:30 AM IST (Updated: 7 Oct 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

ராஜ்தாக்கரே விடுத்த எச்சரிக்கையின் எதிரொலியாக நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த மத்திய ரெயில்வே தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மும்பை

மும்பை எல்பின்ஸ்டன், பரேல் ரெயில் நிலையங்களை இணைக்கும் குறுகிய நடைமேம்பாலத்தில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் சர்ச்கேட்டில் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், பங்கேற்று பேசிய அக்கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, ரெயில் நிலைய நடைமேம்பாலங்களில் நடைபாதை வியாபாரிகளை 15 நாளில் அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கு கெடு விதித்தார். இல்லையெனில் 16–வது நாள் அந்த பணியை தனது கட்சி தொண்டர்கள் செய்வார்கள் என எச்சரித்தார்.

ராஜ்தாக்கரேயின் இந்த எச்சரிக்கை நேற்றே பல ரெயில் நிலையங்களில் எதிரொலித்தது. நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து இருக்கும் தாதர் உள்ளிட்ட பிரதான ரெயில் நிலையங்களின் நடைமேம்பாலங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

தாதர் ரெயில் நிலையத்தில் வெளிப்புற பகுதிகளிலும் நேற்று நடைபாதை வியாபாரிகளை காணமுடியவில்லை. தாதர் ரெயில் நிலைய மேற்கு பகுதியில் மாநகராட்சியின் நடைபாதை வியாபாரிகளின் பொருட்களை பறிமுதல் செய்யும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மத்திய ரெயில்வே தனது கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு (ஸ்டே‌ஷன் மாஸ்டர்கள்) ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதை வியாபாரிகள், பிச்சைக்காரர்கள் இருந்தால் அதுபற்றி உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story