தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்கிறார், நாராயண் ரானே
காங்கிரசில் இருந்து விலகிய நாராயண் ரானே, தனிக்கட்சி ஆரம்பித்ததுடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர போவதாக அறிவித்துள்ளார்.
ரத்னகிரி,
முன்னாள் முதல்–மந்திரி நாராயண் ரானே காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகினார். இதையடுத்து, ‘மராட்டிய சுவாபிமான் பக்ஷ்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். மேலும், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் சேர போவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, டெல்லியில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவை நாராயண் ரானே சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர போவதாக அவர் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக ரத்னகிரியில் நிருபர்களிடம் பேசிய நாராயண் ரானே, ‘‘மராட்டியத்தின் வளர்ச்சிக்காவும், கொங்கன் மண்டலத்தின் மேம்பாட்டுக்காகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார்.
மேலும், மத்திய மந்திரிசபையில் இடம்பெறுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘2019–ம் ஆண்டு வரை மராட்டிய அரசியலில் நீடிப்பேன்’’ என்று பதில் அளித்தார். கொங்கன் மண்டலத்தின் பலம்வாய்ந்த தலைவராக கருதப்படும் 65 வயது நாராயண் ரானே, கடந்த 1999–ம் ஆண்டு சிவசேனா– பா.ஜனதா கூட்டணி ஆட்சியின்போது முதல்–மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story