கெய்க்வாட் கமிட்டி பரிந்துரைகளை ஆய்வுசெய்ய குழு மராட்டிய அரசு நியமித்தது


கெய்க்வாட் கமிட்டி பரிந்துரைகளை ஆய்வுசெய்ய குழு மராட்டிய அரசு நியமித்தது
x
தினத்தந்தி 7 Oct 2017 5:00 AM IST (Updated: 7 Oct 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின மேம்பாட்டு துறையில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கெய்க்வாட் கமிட்டி ஆய்வுசெய்தது.

மும்பை,

பழங்குடியின மேம்பாட்டு துறையில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கெய்க்வாட் கமிட்டி ஆய்வுசெய்தது. இதன் பரிந்துரைகளை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் மற்றொரு குழுவை மராட்டிய அரசு நியமித்தது.

மராட்டியத்தில் கடந்த காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பழங்குடியின மேம்பாட்டு துறை மந்திரியாக பதவி வகித்தவர், விஜய்குமார் காவித். இவரது பதவிக்காலத்தில் பழங்குடியின மேம்பாட்டு துறையில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் அரங்கேறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இதன் மீது விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி எம்.ஜி.கெய்க்வாட் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை கடந்த 2014–ம் ஆண்டில் மாநில அரசு நியமித்தது. இந்த குழு ஆய்வுநடத்தி அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த நிலையில், கெய்க்வாட் குழு குறிப்பிட்ட பரிந்துரைகளை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி பிரபாகர் கரன்டிகர் தலைமையில் மற்றொரு குழுவை மராட்டிய அரசு நியமித்து இருக்கிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘‘இது பட்னாவிஸ் அரசின் நோக்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விஜய்குமார் காவித் ஊழல்புரிந்ததாக கெய்க்வாட் கமிட்டி அறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது. அப்படி இருக்கையில், பா.ஜனதா அரசு மற்றொரு குழுவை நியமித்தது ஏன்?’’ என்று கேள்வி விடுத்தது.

மேலும், இது விஜய்குமார் காவித் மீதான சட்ட நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான யுக்தி என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டது.

மராட்டியத்தின் பழங்குடியின பிரிவை சேர்ந்த முக்கிய தலைவரான விஜய்குமார் காவித், தற்போது பா.ஜனதா சார்பில் நந்தூர்பர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கிறார். அவரது மகள் பா.ஜனதா சார்பில் டெல்லி மேல்–சபை எம்.பி. ஆக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story