மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:30 AM IST (Updated: 7 Oct 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நால்ரோடு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்களின் அவசர உதவி மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக இந்த ஆஸ்பத்திரியையே நம்பி உள்ளனர்.

ஆனால் இங்கு இடப்பற்றாக்குறையால் நோயாளிகளும், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் இந்த ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், இந்த ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டதுடன், புதிய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 65 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2015–ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது சுமார் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் அவசர சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கோரியும், புதிய கட்டிடத்தை விரைவில் திறக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மடத்துக்குளம் பகுதியில் நோட்டீசு ஒட்டப்பட்டது. அதன்படி, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அவர்களிடம் மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் சவுந்திரராஜன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்ய முயற்சித்தார். ஆனால் அவர்கள், அதை ஏற்றுக்கொள்ளாமல், அரசு ஆஸ்பத்திரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறிச்சென்றனர்.


Next Story