கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வார்டில் கலெக்டர் திடீர் ஆய்வு


கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வார்டில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2017 3:30 AM IST (Updated: 7 Oct 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வார்டில் கலெக்டர் ஹரிகரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட பலர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேற்று திடீரென்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அவர், அங்கு டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குஅளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகனிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் ஹரிகரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனி டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு 3 முறை ரத்த பரிசோதனை செய்யவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ரத்த மாதிரி பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று 5 முதல் 6 நாட்கள் வரை சிகிச்சை பெறுகிறார்கள். பின்னர் நோய் குணமாகவில்லை என்றால் கடைசி நேரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளித்து டாக்டர்கள் காப்பாற்றி வருகின்றனர். சிலர் சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர். எனவே உயிரிழப்பை தடுக்க நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களில் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story