கோவையில், வரி உயர்வை கண்டித்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கைது
கோவையில் வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு,க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடந்த 18–ந் தேதி 100 வார்டுகளிலும ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்..
இந்த நிலையில் வரி உயர்வை கண்டித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், வரி சீராய்வு என்ற பெயரில், குப்பை வரி, குடிநீர் வைப்புத்தொகை ஆகியவற்றை கோவை மாநகராட்சி உயர்த்தி உள்ளது. அதை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
அதன்பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.
போராட்டத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, எஸ்.எம்.சாமி, சிங்கை ரவிச்சந்திரன்(தி.மு.க.), மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், வெள்ளிங்கிரி, மு.கிருஷ்ணசாமி(ம.தி.மு.க.), சவுந்திரகுமார், காந்தகுமார், துளசிராஜ் (காங்.), வி,எஸ்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்டு), ஜெயசந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூ.), கார்த்திகேயன், ரமேஷ், வடிவேல் (கொ.ம.தே.க.) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டம் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தங்கள் கட்சி கொடியை ஏந்தி கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக கோவை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.