காதலித்து பெண்ணுடன் இருந்து விட்டு சாதி பெயரை சொல்லி திட்டி தற்கொலைக்கு தூண்டிய டிரைவருக்கு ஆயுள் தண்டனை


காதலித்து பெண்ணுடன் இருந்து விட்டு சாதி பெயரை சொல்லி திட்டி தற்கொலைக்கு தூண்டிய டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 7 Oct 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு சாதி பெயரை சொல்லி திட்டி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 26). மினி பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (19). வெவ்வேறு சாதியை சேர்ந்த 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து காதலர்கள் 2 பேரும் 18-4-2013 அன்று கோவைக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது சுரேஷ், சீதாலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் சீதாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். அதற்கு சுரேஷ் நீ வேறு சாதி, நான் வேறு சாதி என்பதால் உன்னை திருமணம் செய்ய முடியாது. எனவே நான் எனது பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன் என எழுதி கொடுத்து விட்டு போ என கூறி சாதி பெயரை சொல்லி திட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன சீதாலட்சுமி எழுதி கொடுத்து விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சீதாலட்சுமி 29-4-2013 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினர். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து சுரேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சதீஷ்குமார் ஆஜரானார்.

Next Story