கொடைக்கானல் ஏரியில் படகுகள் மோதின; தண்ணீரில் வீரர் மூழ்கியதால் பரபரப்பு
கொடைக்கானல் ஏரியில் நேற்று நடந்த படகு போட்டியின்போது, ஸ்கல் படகும், நகராட்சி படகும் மோதின. இதில் ஒரு வீரர் தண்ணீருக்குள் மூழ்கினார். இதையடுத்து மாநில அளவிலான படகு போட்டி நிறுத்தப்பட்டது. போட்டிகள் இன்று மீண்டும் நடக்கிறது.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் மாநில அளவிலான ஸ்கல் விரைவு படகு போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. நேற்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அமெச்சூர் ரோயிங் அசோசியேசன் பொருளாளர் வெங்கட்ராமன், கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் தலைவர் ராமச்சந்திர துரைராஜா ஆகியோர் கொடியேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
மொத்தம் 18 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் 5 போட்டிகள் நடத்தப்பட்டன. அடுத்த போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் தூய்மை பணியினை மேற்கொள்ளப் போவதாக கூறி நகராட்சி ஊழியர்கள் 8 படகுகளுடன் போட்டிகள் நடைபெற்ற பகுதிக்குள் புகுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போட்டியில் பங்கேற்ற கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 36) என்பவர் ஓட்டிய ஸ்கல் படகின் குறுக்கே வந்த நகராட்சி படகு அவரது படகின் மீது மோதியது. இதில் ஈஸ்வரனின் படகு கவிழ்ந்தது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனடியாக அவர் போட் கிளப்பின் விசைப்படகு மூலம் மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரவணன் கூறும்போது, கொடைக்கானல் ஏரி, நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எந்த விதமான போட்டிகள் நடத்துவதாக இருந்தாலும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும். இந்த போட்டிகள் நடத்த அனுமதி கோரவில்லை. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏரியினை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக சுகாதார ஊழியர்கள் படகுகள் மூலம் பணியில் ஈடுபட்டனர். இதற்கும் போட்டிகள் நடப்பதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அத்துடன் போட்டிகள் நடத்துவதால் நகராட்சி படகு குழாமிற்கு ரூ.23 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படும். அதனை போட்டி நடத்துபவர்கள் செலுத்த வேண்டும், என்றார்.
இதுகுறித்து போட்கிளப்பின் தலைவர் ராமச்சந்திரதுரைராஜா கூறுகையில், போட்டிகளை நடத்த எந்த விதமான தடையும் விதிக்கக்கூடாது என்றும், கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2012–ம் ஆண்டு இதேபோல ஸ்கல் படகு போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது போட்டிகள் நடத்துவது குறித்தும் ஏற்கனவே நகராட்சிக்கு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது, என்றார்.
இதைத்தொடர்ந்து இதுதொடர்பான சமாதான பேச்சுவார்த்தை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் போட்டிகளை நடத்துவது என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது உள்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டிகளை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடத்த போட் கிளப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.