புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆய்வின்போது தகவல்


புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆய்வின்போது தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:00 AM IST (Updated: 7 Oct 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக எம்.எல்.ஏ.க்கள் ஆய்வின்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவர்னர் கிரண்பெடி ஒருபுறமும், அமைச்சர்கள் ஒருபுறமும் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் புதுவை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் அதன் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பொதுக்கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த குழுவினர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோர்களை பார்த்து உடல்நலம் விசாரித்தனர். நோயாளிகள் அதிக அளவில் இருந்ததால் ஒரே படுக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் உள்பட சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக நகரில் முறையாக குப்பைகளை வாருவதில்லை என்று புகைப்பட ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டினார்கள். தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் கொசுவை ஒழிக்க மருந்துகூட தெளிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார்கள். மருந்தினை சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறையிடம் வழங்கினால் அவர்கள் தெளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சிவா எம்.எல்.ஏ. பேசும்போது, பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு 10 காசுகூட தூர்வாரும் பணிகளுக்கு செலவிடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப் போன்றவற்றை வெளியே போட உள்ளாட்சித்துறை தடை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற போதிய வசதியில்லாததால் தற்போது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் செயல்படும் பழைய மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் உள்ள அதிகாரிகளின் அலுவலகத்தை அகற்றிவிட்டு அங்கு நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது, நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறைக்கு மக்களின் உயிர் தொடர்பான பிரச்சினையில் அக்கறையில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். டெங்கு காய்ச்சலால் பெருமளவு உயிரிழப்பு இல்லாதபோதிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார் பேசும்போது, கடந்த மாதத்தில் 1,816 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளதாகவும், சராசரியாக நாள்தோறும் 45 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த மாதம் 611 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், இந்த மாதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். நேற்று ஒருநாள் மட்டும் 140 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story