ஆட்சி மீது குறைகூறும் நோக்கத்தில் குற்றச்சாட்டுகளை கூறுகிறார் கவர்னர் மீது, நமச்சிவாயம் தாக்கு
ஆட்சி மீது குறைகூறும் நோக்கத்தில் குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறுகிறார் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, கலைமாறன், செயற்பொறியாளர்கள் தாமரை புகழேந்தி, கன்னியப்பன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வாய்க்கால்களை தூர்வாருவது, வெள்ளசேதங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:–
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக புதுவை மாநிலத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரவும், சாலையில் விழும் மரங்களை அகற்றுவதற்கு தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மழை பெய்தபோது தண்ணீர் தேங்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு மழைநீர் தேங்கினால் அதை உடனடியாக வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற 9–ந்தேதி முதல் உப்பணாறு வாய்க்கால் முகத்துவாரம் தூர்வாரப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடி தேவைப்படுகிறது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகள் இணைந்து டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. பொதுப்பணித்துறை மூலம் ஏரி, குளங்களை தூர்வார சுற்றுச்சூழல்துறை ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது. இதுவரை ரூ.60 லட்சம் செலவில் 15 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்டுள்ள ஏரிகளில் மரக்கன்று நடுவது, மதகுகளை சரிபார்ப்பது போன்ற பணிகள் தொடங்க உள்ளன.
இந்த ஆட்சியின் மீது குறைகூறும் நோக்கத்தில் கவர்னர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கொசு மருந்து அடிக்க உள்ளாட்சித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது.
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் ஒத்துழைப்பு தருவார் என்று காத்திருந்தோம். ஆனால் அவர் தனது போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை. அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார். இதனால் குறிப்பிட்ட காலத்தில் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. விவசாய கடன் தள்ளுபடி, இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கவர்னர் தடையாக உள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராடி வருகிறோம். கவர்னரின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய நேரத்தில் இப்பிரச்சினையில் தலையிடுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.