பின்னோக்கி வந்த லாரி ஏறியதில் காவலாளி பலி பிணத்தை எடுத்துச்செல்ல ஊர்தி இல்லாததால் உறவினர்கள் பரிதவிப்பு


பின்னோக்கி வந்த லாரி ஏறியதில் காவலாளி பலி பிணத்தை எடுத்துச்செல்ல ஊர்தி இல்லாததால் உறவினர்கள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2017 4:45 AM IST (Updated: 7 Oct 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பின்னோக்கி வந்த லாரி ஏறியதில் காவலாளி பலியானார். அவரது பிணத்தை எடுத்துச்செல்ல ஊர்தி இல்லாமல் உறவினர்கள் பரிதவித்தனர்.

திருச்சி,

திருச்சி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் மணி (வயது54). இவர் காந்திமார்க்கெட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் தற்போது கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி அந்த நிறுவனத்திற்கு நேற்று காலை வந்தது. அப்போது பொருட்களை இறக்குவதற்காக டிரைவர் லாரியை பின்னோக்கி இயக்கியபோது,

எதிர்பாராதவிதமாக அங்கிருந்த காவலாளி மணி மீது லாரி ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணியின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இறந்து போன மணியின் பிரேத பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று மதியமே முடிந்து விட்டது. ஆனால் இரவு 8 மணி வரை அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பரிதவித்தனர்.

இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், மதியமே பிரேத பரிசோதனை முடிந்து விட்டது. மருத்துவமனைக்கு சொந்தமான அமரர் ஊர்தி மூலம் பிணத்தை அனுப்பி வைப்பதாக ஊழியர்கள் கூறினர். ஆனால், இரவு வரை ஊர்தி அனுப்பி வைக்கப்படவில்லை. இதுகுறித்து ஊழியர்களிடம் மதியம் முதல் இரவு வரை பலமுறை கேட்டோம். அதற்கு அவர்கள் தற்போதைக்கு ஊர்தி இல்லை என்று தான் தொடர்ந்து கூறினர். தற்போது இரவு ஆகிவிட்டது. இனிமேல் அவர்கள் வாகனம் கொடுத்து பிணத்தை எடுத்துக்கொண்டு எப்படி அடக்கம் செய்வது என்று புலம்பினர்.

Next Story