திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி சாவு


திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி சாவு
x
தினத்தந்தி 7 Oct 2017 4:45 AM IST (Updated: 7 Oct 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்து போனாள்.

திருச்சி,

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்-உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி துவாக்குடி அண்ணாவளைவு வடக்குமலை பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது28). கூலி தொழிலாளி. இவரது மனைவி திருமேணி. இவர்களது மகள் இனியா(4). இனியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் இனியாவுக்கு நேற்று காய்ச்சல் அதிகமாகியது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.45 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனையில் இனியா அனுமதிக்கப்பட்டாள். 5.30 மணியளவில் இனியா பரிதாபமாக இறந்து போனாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனை விபத்து மற்றும் உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவ பிரிவு முன்பு வாசல் படியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

இனியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் திருவெறும்பூர் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என்று கூறி, கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளித்தனர். பின்னர் இனியாவுக்கு காய்ச்சல் அதிகமானதால் இன்று(நேற்று) திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினர்.
அதன்பேரில், திருச்சி அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கும்படி பலமுறை கேட்டோம். அதற்கு அவர்கள் தற்போது ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறி தொடர்பை துண்டித்த வண்ணம் இருந்தனர். அதன்பிறகு மாலை 4.45 மணிக்கு இனியாவை கொண்டு வந்தோம்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சீட்டு வாங்க வேண்டும் என்று அங்கும், இங்கும் அலைக்கழித்தார்களே தவிர, இனியாவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. பின்னர், இனியா இறந்து விட்டாள் என்றும், உடலை எடுத்து செல்லுங்கள் என்றும் மாலை 5.30 மணியளவில் கூறினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளை ஒரே அறையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். அதே அறையில்தான் இனியாவையும் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். உடனடியாக உரிய சிகிச்சை அளித்து இருந்தால் இனியாவை காப்பாற்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன்பிறகு இறந்து போன சிறுமி இனியாவின் உடலை தந்தை ராஜ்குமார் தோளில் தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த ஆம்புலன்சில் வைத்து எடுத்து சென்றார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிறுமி இறந்து போன சம்பவத்தால் நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

இந்தநிலையில் நேற்று இரவு மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை. டெங்கு காய்ச்சல் நோய்க்கு சரியான சிகிச்சை அளிப்பது கிடையாது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக எழுதி கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று எழுதி கொடுத்தனர். பின்னர் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருச்சி சோமரசம்பேட்டை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மூக்கன். இவருடைய மனைவி கலாராணி(வயது 55). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை, அவருடைய குடும்பத்தினர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கலாராணியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கலாராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவருடைய மகள் ராகிலாபானு (வயது 35). இவருக்கும் காலாடிபட்டியை சேர்ந்த ஜெயிலாப்தீன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராகிலாபானு தனது கணவர் ஜெயிலாப்தீன் மற்றும் குழந்தைகளுடன் திருச்சியில் வசித்து வந்தார்.

பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறைக்காக ராகிலாபானு மகள்களுடன், தனது தந்தை ஜமால்முகமது வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ராகிலாபானுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராகிலாபானு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ராகிலாபானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்தவர் ராஜா. திருச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சர்மி. இவர்களது மகன் நரேன்தேவ் (வயது5). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி.படித்து வந்தான். சிறுவனுக்கு கடந்த சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவனை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து வேறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நரேன்தேவ் பரிதாபமாக இறந்தான்.

Next Story