தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 3:53 AM IST (Updated: 7 Oct 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பாலக்கோட்டில் கலெக்டர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டத்தை கலெக்டர் விவேகானந்தன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்று வட்டாரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பொன்ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாது தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனுராதா மாணவர்களிடையே டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்களை பற்றியும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், சித்தா டாக்டர் விஜயலட்சுமி நிலவேம்பு கசாயம் குறித்தும், அதை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினர். கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் பிரசன்னா, அனிதா, சுகாதார ஆய்வாளர் கணேசன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தை வட்டார மருத்துவ அலுவலர் ஜீவானந்தம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். டாக்டர் சங்கீதா வரவேற்று பேசினார். சுகாதார ஆய்வாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

முகாமில் ஏடிஸ் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது குறித்து, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து கொள்வது குறித்தும், நிலவேம்பு கசாயம் குடிப்பது குறித்தும் விளக்கி கூறினர். மேலும் டெங்கு பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினர். முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story