பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 18 பேர் கைது


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 18 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2017 5:12 AM IST (Updated: 7 Oct 2017 5:12 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 18 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 18 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு மேற்கு மண்டல போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல்களை கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள், பொருட்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டம்–ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமி‌ஷனர்(மேற்கு) மாலினி கிருஷ்ணமூர்த்தி மீட்கப்பட்ட நகைகள், பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர், அந்த பொருட்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கினார். முன்னதாக கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் மாலினி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:–

பெங்களூரு மேற்கு மண்டலத்தில் உள்ள உப்பார்பேட்டை, சிக்பேட்டை உள்ளிட்ட போலீசார் நகரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 பேரை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில், 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகள், 57 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள், ரூ.2¼ லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 7 லட்சம் ஆகும்.

இதன்மூலம் நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற 73 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல்களை கைது செய்த மேற்கு மண்டல போலீசாருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story