மந்திரி யு.டி.காதர் கார் மீது கல்வீச்சு பதற்றம்; போலீசார் குவிப்பு
மங்களூரு அருகே பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்த வழியாக வந்த மந்திரி யு.டி.காதரின் கார் மீது கல்வீசி மர்மநபர்கள் தாக்கினர்.
மங்களூரு,
மங்களூரு அருகே பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்த வழியாக வந்த மந்திரி யு.டி.காதரின் கார் மீது கல்வீசி மர்மநபர்கள் தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட முக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜூபைர்(வயது 39). பா.ஜனதா கட்சியின் பிரமுகரான இவர் கடந்த 4–ந் தேதி தனது நண்பர் இலியாசுடன் மாலையில் மசூதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் ஜூபைர் மற்றும் அவரது நண்பர் இலியாசை அரிவளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஜூபைர் சம்பவ இடத்திலேயே செத்தார்.
மேலும் படுகாயம் அடைந்த இலியாசை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.இந்த நிலையில் ஜூபைரை படுகொலை செய்த மர்மநபர்களை கைது செய்யக்கோரி மங்களூரு அருகே உள்ள தொக்கொட்டு பகுதியில் நேற்று பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முகச்சோரி பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மந்திரி யு.டி.காதர் நேற்று மாலை மங்களூருவிற்கு வந்து கொண்டிருந்தார். தொக்கொட்டு பகுதி அருகே வந்தபோது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பா.ஜனதா கட்சியினர் மந்திரி யு.டி.காதரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சில மர்மநபர்கள் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக மந்திரி யு.டி.காதர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மந்திரி யு.டிகாதரை வேறொரு கார் மூலம் பாதுகாப்பாக மங்களூருவிற்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரி யு.டி.காதரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.மந்திரி கார் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.