சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் தான் போட்டியிடுவேன்
சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா சட்டசபை தேர்தலின்போது சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். இது அவரது சொந்த தொகுதி. ஆனால் அடுத்த ஆண்டு(2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் எடியூரப்பா வட கர்நாடகத்தில் உள்ள தேரதாள் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கர்நாடகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும்படி அவருக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் எடியூரப்பாவுக்கோ சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு செல்ல விருப்பம் இல்லை. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார். நேற்று பாகல்கோட்டையில் பா.ஜனதா சார்பில் நெசவாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட எடியூரப்பா பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
வட கர்நாடகத்தில் போட்டியிடும்படி எனக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதில் எனக்கு விருப்பம் இல்லை. இதுபற்றி கட்சி மேலிட தலைவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளேன். அதனால் சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் இருந்து தான் போட்டியிடுவேன். சித்தராமையா மந்திரிசபையில் உள்ள சில மந்திரிகளின் ஊழல்களை இன்னும் 2 நாட்களில் வெளிப்படுத்துவேன்.ஊழல் மந்திரிகளை பாதுகாக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படையை ஏவிவிட்டு சோதனை நடத்த சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இது பெரும் முட்டாள்தனமானது. பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் மீது சித்தராமையாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இட ஒதுக்கீட்டின் அளவை உடனே அதிகரிக்க வேண்டும்.
சித்தராமையா வெறும் பேச்சால் அந்த சமுதாயங்களின் மக்களை ஏமாற்றுகிறார். சித்தராமையா வாக்குறுதி கொடுப்பதில் தான் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.