கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்–மந்திரி சித்தராமையா தலைமை தாங்கி பேசியதாவது:–
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசின் சாதனைகள் மற்றும் மத்திய பா.ஜனதா அரசின் தோல்விகளை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். இதை நாம் அவசரமாக செய்ய வேண்டும். நாம் இப்போது தேர்தல் ஆண்டில் உள்ளோம். நாம் மெய்மறந்து இருக்கக்கூடாது. நாம் மக்களுக்கு பொய்யை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.நமது அரசின் சாதனைகள் கண்முன்னே உள்ளது. அதை மக்களிடம் விவரமாக எடுத்துக்கூற வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி அரசு எந்த சாதனையையும் செய்யவில்லை. பிரதமர் மோடி மலிவான பிரசாரத்தை தேடிக்கொள்கிறார். இதை நாம் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று இந்த பணியை செய்ய வேண்டும்.
நமது கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களில் இந்த பணியில் ஆர்வம் காட்டவில்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இனிமேல் அதுபோல் இருக்க வேண்டாம். வீடு, வீடாக சென்று நமது சாதனைகளை பிரசாரம் செய்யுங்கள். ஒவ்வொரு பூத் மட்டத்திலும் புதிய ஏஜெண்டுகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஊக்கப்படுத்தி தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியை கட்சி செய்து வருகிறது.முதல் கட்டமாக வீடு, வீடாக சென்று நமது சாதனைகளை விளக்கும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கட்சியில் உள்ள கருத்துவேறுபாடுகளை தீர்க்க ஏற்கனவே 3 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள கருத்துவேறுபாடுகளை களைய ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அரசின் திட்ட தொடக்க விழா எங்கு நடந்தாலும் அதில் மக்கள் அதிகளவில் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள். இதை கவனிக்கும்போது அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தி அளிக்கிறது என்றுதான் அர்த்தம். இதை வைத்து மக்களின் ஆசி நமக்கு உள்ளது என்று நாம் கருத முடியும்.இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு(2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இது 100–க்கு 200 சதவீதம் உறுதி. இந்த பொறுப்பை நாம் அனைவரும் வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும். நமது கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திக்க விரும்பினார். அதனால் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.