ஜூடோ சூப்பர் பெண்கள்!
உடலில் எந்தக் குறையும் இல்லை என்றாலும், உள்ளத்தில் ஊனம் கொண்டு சுருண்டு கிடப்பவர்கள் மத்தியில், விஜயசாந்தியும் சுசீலாவும் சாதனைப் பெண்கள்.
விழியில் ஒளியில்லை என்றால் என்ன, மனதில் வழியிருக்கிறது என்று வெற்றிநடை போடும் இப்பெண்கள், பார்வையற்றோருக்கான உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து இப்போட்டியில் கலந்துகொள்ளும் முதல் வீராங்கனைகள் என்ற பெருமை பெற்ற இவர்களை பரபரப்பான பயிற்சி வேளையில் சந்தித்தோம்...
விஜயசாந்தி
‘‘திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொங்கராம்பட்டி எனது சொந்த ஊர். அப்பா ரவி, அம்மா லட்சுமி, அண்ணன் விஜயகுமார் ஆகியோர் விவசாய கூலித்தொழிலாளர்கள். அக்கா விஜயகுமாரிக்கு திருமணமாகிவிட்டது.
ஐந்தாம் வகுப்பு வரை எனக்கு இயல்பான பார்வை இருந்தது. அப்போது ஒருநாள், சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் தாங்கிக் கம்பியில் சக சிறுமி களுடன் ஊஞ்சலாடினேன். பாரம் தாங்காமல் அறுந்துகொண்டு விழுந்த கம்பியின் பீங்கான் பொருள், என் நெற்றியில் தாக்கியது. அதனால் பார்வை நரம்பு துண்டிக்கப்பட்டு, என் பார்வை பறிபோய்விட்டது.
அதனால், ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண பள்ளியில் படித்துவந்த நான், 6–ம் வகுப்பு முதல், பார்வையற்றோருக்கான பள்ளியில் படிக்க வேண்டியதானது. எட்டாம் வகுப்பு வரையில் ஆரணியில் உள்ள அமலராகிணி பார்வையற்றோர் பள்ளியில் படித்தேன். பின்னர் மீண்டும் 9–ம் வகுப்பு முதல் 12–ம் வரை ஆரணியில் உள்ள நிர்மலா மாதா பொதுப் பள்ளியில் பயின்றேன்.
பின்னர் சென்னை வந்த நான், இங்குள்ள ராணி மேரிக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பில் சேர்ந்தேன். அதன்பின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.எட். முடித்து, பின் மீண்டும் ராணி மேரிக் கல்லூரியில் எம்.ஏ. வரலாறில் சேர்ந்து தற்போது முதலாமாண்டு படித்து வருகிறேன்.
எனக்கு எப்போதுமே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பார்வை முற்றிலுமாக பாதிக்கப்படும் வரை நான் தடகளத்தில் குண்டு எறிதல், நீளந்தாண்டுதல், உயரந்தாண்டுதல் போட்டிகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்கிறேன். பார்வையற்றோருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கலந்துகொண்டு கோப்பை வென்றிருக்கிறோம்.
நான் பள்ளியில் படிக்கும்போது சிவாஜி என்ற கராத்தே பயிற்சி யாளர் எங்கள் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்தார். அவரிடம், 8–ம் வகுப்பு தொடங்கி 12–ம் வகுப்பு வரை ஜூடோ கற்றேன்.
கல்லூரிக்கு வந்ததும், முதலாமாண்டில் ஜூடோ பயிற்சிக்கு ஆட்களைத் தேர்வு செய்தார்கள். அதில் நான்கு மாணவிகளில் ஒருவராக நான் தேர்வு பெற்றேன்.
இங்கு எஸ்.டி.ஏ.டி. ஜூடோ பயிற்சியாளர் உமாசங்கரின் வழிகாட்டலில் நான் பயிற்சி பெறத் தொடங்கியதுமே விறுவிறு வளர்ச்சி ஏற்பட்டது.
இரண்டாமாண்டு படிக்கும்போது டெல்லியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற நான், அங்கு தங்கப் பதக்கம் வென்றதன்மூலம் பிரேசில் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றேன். அது எனக்கு முதல் சர்வதேசப் போட்டி என்பதால் கொஞ்சம் பயமும் பதற்றமும் இருந்தன. அதனால் வெண் கலப் பதக்கம் பெற்றேன்.
தொடர்ந்து 2015–ல் கோவாவில் நடைபெற்ற போட்டியிலும், அதற்கடுத்த லக்னோ தேசியப் போட்டியிலும் தங்கப் பதக்கங்கள் வென்றேன்.
கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் தட்டினேன். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு சென்னை கிண்டியில் உள்ள ‘யான்’ என்ற நிறுவனம் எனக்கு நிதியுதவி செய்தது.
தற்போது, உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் பார்வையற்றோருக்கான உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளேன். இந்தியாவில் இருந்து வீரர்கள் 4 பேர், வீராங்கனைகள் 2 பேர் என மொத்தம் 6 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. அந்த 2 வீராங்கனைகள் நானும், எனது சக கல்லூரித் தோழியான சுசீலாவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் எங்களின் தரவரிசை நிலையை உயர்த்தினால், வருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எங்களால் பங்கேற்க முடியும். அதற்குத் தகுதி பெற்று பதக்கம் வெல்வதுதான் எனது லட்சியம்!’’ என்றார் நம்பிக்கை தெறிக்க.
தனக்கு தனது குடும்பத்தினரும், முதல்வர் சாந்தி, உடற்கல்வி இயக்குநர் சுஜிதா, விளையாட்டு ஆசிரியைகள் வசந்தகுமாரி, உமா, மெர்லின் ஆகியோர் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகத்தினரும், விடுதி வசதி அளித்திருக்கும் ‘விழிகள்’ தொண்டு நிறுவனத்தினரும் மிகவும் உறுதுணையாக இருப்பதாக விஜயசாந்தி நன்றிப்பெருக்குடன் கூறினார்.
பயிற்சி, படிப்பு தவிர மற்ற நேரங்களில் சும்மா இருந்தால் சுயஇரக்கம் தன்னைத் தாக்கும் என்பதால், பாடல் கேட்பதும், தோழிகளுடன் அரட்டை அடிப்பதும் தனக்குப் பிடித்தமான விஷயங்கள் என்கிறார் விஜயசாந்தி.
சுசீலா
“கரூர் மாவட்டம் ஆத்துப்பட்டி நான் பிறந்த ஊர். அப்பா மணியும் அம்மா வள்ளியம்மையும் விறகுவெட்டும் தொழிலாளர்கள். ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை இருக்கிறார்கள். குடும்பத்தில் நான் மட்டும் பிறவியிலேயே பார்வைத் திறன் இன்றிப் பிறந்தேன்.
பத்தாம் வகுப்பு வரை செங்குளம் அரசுப் பள்ளியிலும், 11, 12–ம் வகுப்புகளை திருச்சி புத்தூரில் உள்ள பார்வையற்றோருக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றேன்.
நான் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறேன், பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்.
என் கவனம் முழுக்க ஜூடோ பக்கம் திரும்பியது சென்னையில் ராணிமேரிக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தபிறகுதான். 2015–ல் கோவா விலும், 2016–ல் லக்னோவிலும் நடைபெற்ற தேசியப் போட்டிகளில் தங்கம் வென்றேன்.
தேசிய அளவில் பெற்ற வெற்றி காரணமாக, சென்ற ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் சர்வதேச ஜூடோ போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றேன். அதில் தங்கப்பதக்கமும் வென்று வந்தேன். அப்போட்டியில் நான் பங்கேற்பதற்கு, சென்னை நங்கநல்லூரில் பார்வையற்ற பெண்களுக்கான விடுதியை நடத்திவரும் ராதாகிருஷ்ணன் பொருளாதார உதவி செய்தார்.
நான் கடந்த ஆண்டில் வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச அழைப்பு ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்றேன். இதோ இந்த உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதுடன், ஜனவரியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியிலும், ஆசிய போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது எனது இலக்கு. அதன் மூலம் பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று அதில் பதக்கம் வெல்வதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். நான் ஜூடோவில் இவ்வளவு தூரம் வந்ததற்கு எனது குடும்பம், கல்லூரி நிர்வாகம், பயிற்சியாளர்தான் காரணம்’’ என்றார்.
பி.ஏ. படிப்பை முடித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.எட். முடித்த சுசீலா தற்போது மீண்டும் ராணி மேரிக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு பயின்று வருகிறார். இசையை ரசிப்பதும், புத்தகங்கள் வாசிக்கக் கேட்பதும் தனது பிடித்த பொழுதுபோக்குகள் என்கிறார்.
‘‘நாங்கள் சாதிக்க நினைப்பதும், அதற்காக உழைப்பதும், எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும், அவர்களுக்கு ஓர் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்!’’ என்று விஜயசாந்தியும் சுசீலாவும் கோரஸ் குரலில் கூறுகின்றனர்.
உலக அரங்கிலேயே முத்திரை பதித்துவிட்ட இவர்களுக்கு, பொருளாதாரம்தான் ஒரு பெரும் தடையாக உள்ளது. பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு பெரிதும் தடுமாறிப் போய்விடுகின்றனர்.
உயரத் துடிக்கும் இந்த உள்ளங்களுக்கு, உதவக்கூடிய கரங்கள் நீளலாமே!
Related Tags :
Next Story