கோவில்பட்டி அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி மயில் சாவு
கோவில்பட்டி அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி மயில் இறந்தது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி மயில் இறந்தது. இதனால் அந்த ரெயில் சுமார் 1¼ மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ரெயில் என்ஜினில் சிக்கிய மயில்சென்னையில் இருந்து நெல்லை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 6.15 மணியளவில் விருதுநகர் மாவட்டம் நல்லி ரெயில் நிலையத்தை கடந்து என்.சுப்பையாபுரம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக பறந்து வந்த ஒரு மயில் எதிர்பாராதவிதமாக ரெயில் என்ஜினின் மீது உள்ள மின்சார கம்பியில் மோதியது.
இதில் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. ரெயில் என்ஜின் மீதுள்ள கம்பியில் சிக்கி தொங்கியவாறு இறந்த மயில் கிடந்தது. ஆனாலும் டிரைவர் ரெயிலை நிறுத்தாமல் மெதுவாக இயக்கி வந்தார்.
1¼ மணி நேரம் தாமதம்இதையடுத்து காலை 6.30 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்ததும் ரெயில் என்ஜின் மீதுள்ள கம்பியில் சிக்கி இறந்து கிடந்த மயிலை ரெயில் நிலைய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் ரெயில் என்ஜினில் சேதம் அடைந்த கம்பியை பழுது பார்த்தனர்.
இதனால் சுமார் 1¼ மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு ரெயில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.