செல்போன் ‘மிஸ்டுகால்’ மூலம் பழக்கம்: போலீஸ் வேலை வாங்கி தருவதாக வேலூர் வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி
செல்போன் ‘மிஸ்டுகால்‘ மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி வேலூரை சேர்ந்த பட்டதாரி வாலிபரிடம் ரூ.13 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
வள்ளியூர்,
செல்போன் ‘மிஸ்டுகால்‘ மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி வேலூரை சேர்ந்த பட்டதாரி வாலிபரிடம் ரூ.13 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. வள்ளியூரை சேர்ந்த இளம்பெண் உள்பட 3 பேர் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரி வாலிபர்வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த மணி மகன் தசரதன்(வயது 29). பட்டதாரி வாலிபரான இவர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவருக்கும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பாறையடி தெருவை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு செல்போன் ‘மிஸ்டுகால்‘ மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
அப்போது, தேவி தனது அண்ணன் அருள்ராஜா போலீஸ் துணை சூப்பிரண்டாக வேலை பார்த்து வருவதாகவும், இதனால் போலீஸ் அதிகாரிகள் பலரை தனது அண்ணனுக்கு தெரியும் என்றும் தசரதனிடம் கூறியுள்ளார். இதனை அவர் உண்மை என நம்பி உள்ளார். அப்போது அவரிடம், எனது அண்ணனிடம் சொல்லி உங்களையும் போலீஸ் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.
ரூ.13 லட்சம் கொடுத்துள்ளார்அதற்கு தசரதன், உங்களையும், உங்கள் அண்ணனையும் நேரில் சந்திக்க வேண்டும் என்று தேவியிடம் கூறியுள்ளார். அதன்படி தேவி, அவரது அண்ணன் அருள்ராஜா, அவருடைய மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2013–ம் ஆண்டு தசரதன் வீட்டுக்கு சென்று பார்த்து வேலை வாங்கி தருவது தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது அருள்ராஜா, தான் போலியாக வைத்து இருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு அடையாள அட்டையையும் தசரதனிடம் காண்பித்துள்ளார்.
இதையெல்லாம் பார்த்து உண்மை என நம்பிய தசரதன், அருள்ராஜா, அவரது நண்பர் கணேஷ், கவிதாவின் தோழி சாந்தா ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு சிறிது, சிறிதாக மொத்தம் ரூ.13 லட்சம் வரை ரொக்கமாகவும், செக், டிடி ஆகியவற்றின் மூலமும் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து வெகு நாட்களாகியும் தரசதனுக்கு அவர்கள் வேலை வாங்கித்தரவில்லை.
போலீசில் புகார்இதனையடுத்து அருள்ராஜாவின் வீட்டுக்கு வந்த தசரதன், எனக்கு வேலை எதுவும் வாங்கி தர வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். அப்போது தேவி, அருள்ராஜா, கவிதா ஆகிய 3 பேரும் சேர்ந்து தன்னை அவதூறாக பேசியதுடன் தனக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தசரதன், வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தங்களிடம் விசாரணை நடத்த வரலாம் என்பதால் தேவி உள்பட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.