ஜெர்மன் நாட்டில் உள்ளது போன்று நவீன தொழில்நுட்பத்தில் கடல் மீது தொங்கும் சாலை அமைக்க மத்திய அரசு ஆணை
ஜெர்மன் நாட்டில் உள்ளது போன்று நவீன தொழில் நுட்பத்தில் ரூ.952 கோடி செலவில் கடல் மீது தொங்கும் சாலை அமைக்க மத்திய அரசு ஆணை வெளியிட்டு உள்ளது என்று அன்வர் ராஜா எம்.பி. பேட்டியின்போது கூறினார்.
பரமக்குடி,
பரமக்குடி ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3–வது நடைமேடை தாழ்வாக இருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் ஏற முடியாமல் அவதிப்பட்டனர். இதனை ரூ.1கோடியே 20 லட்சம் செலவில் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நடைபாதை மேடை ரூ.38 லட்சத்து 62 ஆயிரத்தில் அகலப்படுத்தும் பணிகளும், பிளாட்பார மேற்கூரைகள் ரூ.50 லட்சம் செலவில் விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை அன்வர்ராஜா எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்த ரெயில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த குடிநீர் தொட்டியில் இருந்த நீரை குடித்துப்பார்த்த அவர் தினமும் தொட்டியை சுத்தம் செய்து நல்ல குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் நகராட்சி ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அன்வர்ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கு என்ன தேவை, மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து மத்திய ரெயில்வே துறை மந்திரியிடமும், அதிகாரிகளிடமும் வலியுறுத்தி வருகிறேன். அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பரமக்குடி ரெயில் நிலையத்தில் எம்.பி. நிதி மூலம் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படும். பயணிகள் வசதிக்காக நவீன குளியலறை, கழிப்பறை வசதி செய்யப்பட வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயிலுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கவேண்டும்.
உப்பூரிலும், கடலாடியிலும் அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதால் இதற்கு நிலக்கரி வேண்டும். அதற்காக காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு 2014–ல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில் ரூ.952 கோடியில் கடல் மீது சாலை அமைக்க மத்திய அரசு ஆணை வெளியிட்டுஉள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ளது போன்று நவீன தொழில்நுட்பத்துடன் தொங்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. ரெயில்வே பணிகள் குறித்து தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் தலைமை கழக பேச்சாளர் ஜமால், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், வீட்டு வசதி சங்க தலைவர் திசைநாதன், துணை தலைவர் உதுமான் அலி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், வார்டு செயலாளர்கள் அழகர், பிரபாகரன் உள்பட பலர் வந்திருந்தனர்.