ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 141 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது


ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 141 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 141 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் ரகுபாபு தெரிவித்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசமாக உள்ளதால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் உற்பத்தி ஆவது இல்லை. இங்கு வசித்து வருபவர்கள் மேட்டுப்பாளையம், காரமடை, துடியலூர் ஆகிய பகுதிகளில் பிள்ளைகளின் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் அப்பகுதிகளில் வீடு எடுத்து தங்கி வருகின்றனர். மேலும் மேட்டுப்பாளையம் மற்றும் கோவையை சேர்ந்த நபர்கள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பால் கோவை அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் மேட்டுப்பாளையம்–ஊட்டி இடையே மலை ரெயிலை இயக்கும் ஒரு டிரைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்த போது, அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து வெளி மாவட்டங்களில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்தால், அவர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பலர் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். இது குறித்து மருத்துவத்துறை இணை இயக்குனர் ரகுபாபு கூறியதாவது:–

சமவெளி பகுதிகளான கோவை, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்ச்சல் காரணமாக 141 பேர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இது தவிர ஊட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சைக்கு வந்த 50–க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்காக தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு டெங்கு காய்ச்சலை பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 500 பேருக்கு இங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story