நீலகிரி மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக லால்வேனா நியமனம்


நீலகிரி மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக லால்வேனா நியமனம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக லால்வேனா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஊட்டி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் படி, வருகிற 31–ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 22–ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த பணிகளை மேற்பார்வையிட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சமூக பாதுகாப்பு கமி‌ஷனர் லால்வேனாவை தேர்தல் ஆணையம் நீலகிரி மாவட்டத்துக்கு நியமித்து உள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் லால்வேனா தலைமை தாங்கி பேசினார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரநிதிகளிடம் கடந்த 3–ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ள விவரங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான ஆவண ஆதாரங்கள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்ப படிவங்களில், உத்தரவிடப்படும் போது தள்ளுபடி மற்றும் ஏற்பளிக்கும் காரணம் குறித்த அறிக்கை தவறாமல் படிவங்களில் குறிப்பிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story