டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கோவை மூதாட்டி உள்பட 15 பேர் பலி


டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கோவை மூதாட்டி உள்பட 15 பேர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2017 3:30 AM IST (Updated: 8 Oct 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கோவை மூதாட்டி உள்பட 15 பேர் பலியானார்கள். மேலும் மூளைக்காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கோவை,

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 93). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (63). இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. உடனே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி மேட்டுதெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காந்திமதி (22). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அடுக்காம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் கிருத்திகா (13). இவர் நாமக்கல் மாவட்டம் ஆலிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிருத்திகா சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருத்திகா பரிதாபமாக இறந்தாள்.

மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் மைதிலி (4). இவளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மைதிலி நேற்று இறந்து விட்டாள்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, சிப்பாய் நகர் பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா. இவருடைய மகன் பன்னீர்செல்வம் (15). 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த இவர், தற்போது சிறப்பு தனித்தேர்வு எழுதி உள்ளார். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி கலைவாணி (28). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கலைவாணி பரிதாபமாக இறந்தார்.

கடலூர் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் கோவிந்தவாசன் (7). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோவிந்தவாசன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தான்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் அம்மு என்ற நிவாஷினி (20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நிவாஷினியை அவருடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்காக உறுதி செய்திருந்தனர். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி அப்பாவு நகரை சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி கவிதா (24). தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். டெங்கு காய்ச்சல் தாக்கிய அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் இருந்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனினும் கவிதாவை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை கவிதா இறந்தார்.

தேவகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிமுத்துவின் மனைவி முத்துமாரி. இவரும் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று பலியானார். திருப்புவனம் அருகே உள்ள மேலபூவந்தியை சேர்ந்த குமார் மகன் அமுதன் (6), திருப்புவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் படித்து வந்தான். இவனும் டெங்கு காய்ச்சலால் இறந்துபோனான்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் சேக் அப்துல்லா(30). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகூர் அருகே உள்ள மணப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (35). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் பச்சைமலை அருகே உள்ள ஆர்.கோம்பையை சேர்ந்த சின்னச்சாமி மகள் பழனியம்மாள்(வயது 23). பட்டதாரியான இவர் கடந்த சில நாட்களாகவே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை, அவருடைய குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு திருச்சி அரசு மருத்துவமனையில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். மீனவர். இவருடைய மகன் ஹபீஸ் (5). இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 9 நாட்களாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹபீஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான்.

Next Story