கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 33.33 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக தாளக்கரை, தாமரைக்கரை, வரட்டுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம், கள்ளுப்பள்ளம் ஆகியவை உள்ளன. பர்கூர் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது.
அவ்வாறு வெளியேறும் உபரிநீர் ஓடை வழியாக அருகில் உள்ள கெட்டிச்சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் மலர் தூவி தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏரிக்கு உபரிநீர் செல்லும் ஓடையின் கரையோரமாக வசித்து வரும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் வரட்டுப்பள்ளம் அணைக்கு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ சென்று பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் அவர் கூறுகையில், ‘உபரிநீர் வெளியேறி கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கேட்டுக்கொண்டார்.