கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கோரையாறு தலைப்பிற்கு வந்தடைந்து
கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கோரையாறு தலைப்பிற்கு வந்ததடைந்தது.
நீடாமங்கலம்,
சம்பா சாகுபடிக்காக கடந்த 2–ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து 5–ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோரையாறு தலைப்பிற்கு (மூணாறு தலைப்பு) நேற்று காலை 7 மணிக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதனை தொடர்ந்து கோரையாறு தலைப்பில் இருந்து பாசனத்திற்காக வெண்ணாறு, பாமணியாறுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மகிழ்ச்சிஇதன் மூலம் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். கோரையாற்றின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கர் நிலங்களும், வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கர் நிலங்களும், பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.