மோசடி நிதி நிறுவனம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மோசடி நிதி நிறுவனம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:30 AM IST (Updated: 8 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைப்புத்தொகையாக பணம் செலுத்தி இருந்தனர்.

கடந்த ஓணம் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை திடீரென பூட்டி விட்டு உரிமையாளர் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதற்கிடையே நிதி நிறுவனத்தை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். ஆனால், உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பணம் போன்றவை சிக்கின. அவற்றை நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி, கோர்ட்டில் ஒப்படைக்க எடுத்து சென்றனர்.

இந்தநிலையில், தலைமறைவாக உள்ள உரிமையாளரை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிதி நிறுவனம் முன் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மேல்புறம் ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மாகின் அபுபக்கர் முன்னிலை வகித்தார்.

இதில், மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், பப்புசன் மற்றும் பலர் பேசினர். இறுதியில், மாவட்ட இளைஞரணி செயலாளர் ததேயு பிரேம்குமார் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story