காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்


காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி வாரியாக மாணவ, மாணவிகள் காலாண்டுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பள்ளி பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து அதனை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், இந்த ஆண்டு அரசுத்தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் களும் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் நடந்து முடிந்த காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் முழு ஈடுபாட்டுடன் படித்து அவர்களது பொது தேர்வினை சிறப்பான முறையில் எழுதிட அனைத்து தலைமை ஆசிரியர்கள், கடுமையாக உழைத்திட வேண்டும். மேலும் அக்டோபர் 15-ம் நாள் உலக கை கழுவும் தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நடைபெற உள்ள விழிப்புணர்வு போட்டியில் மாணவ, மாணவிகளை பெருமளவில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் பிரிதிவிராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அம்பிகாபதி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் மற்றும் தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story