ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் நடிகை கவுதமி பேட்டி


ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் நடிகை கவுதமி பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2017 4:45 AM IST (Updated: 8 Oct 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நடிகை கவுதமி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் லைப் எகைன் பவுண்டேசன் சார்பில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை நடிகை கவுதமி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு லைப் எகைன் பவுண்டேசன் அமைக்க முடிவு செய்து புதுடெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அதன் பின்னர் இந்த பவுண்டேசன் தொடங்கினேன். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நான் ஆரம்பத்திலேயே கேட்டேன். தற்போது விசாரணைக்கு கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த விதமான குறுக்கீடும் இன்றி அனைத்து விளக்கங்களும் வரக்கூடிய, விரிவான விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சினிமா கேளிக்கை வரியை பொறுத்த வரையில் ஒரு அரசு நடத்துவதற்கு வரி விதிக்கப்பட வேண்டியது கட்டாயம் தான். அதே சமயம் தொழில்கள் பாதிக்காத அளவுக்கு வரி விதிக்க அரசு முன்வர வேண்டும்.

டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில் கொசு கடித்து ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றால் அது அநியாயம், கொடுமையான விஷயம். கொசுவை ஒழிக்க அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. நம்மை சுற்றி உள்ள இடத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு அப்பாவி மக்கள் பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நிருபர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்த கவுதமி, “தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் தலைமை என்பது தனி விஷயம். அந்த தலைமை யார் ஏற்றால் சரியாக இருக்குமோ, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது அனைவரின் கடமையாக உள்ளது” என்று தெரிவித்தார். 

Related Tags :
Next Story