சின்னசேலம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
சின்னசேலம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு மேலும் ஒரு மாணவர் கோமுகி ஆற்றில் மூழ்கி பலியான பரிதாபம்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே எலியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களுக்கு மணிகண்டன் (வயது 10), பிரேம்குமார் ஆகிய 2 மகன்களும், திரிஷா என்கிற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்.சக்திவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து ராசாத்தி கூலி வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.
அதே ஊரைச்சேர்ந்தவர் பச்சையாப்பிள்ளை மகன் பிரனேஷ் (8). இவன் அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்துவந்தான். இந்த நிலையில் நேற்று மணிகண்டன், பிரனேஷ் மற்றும் சிறுவர்கள் சிலர் அங்குள்ள சித்தேரியில் குளிக்க சென்றனர். அப்போது ஏரியில் இருந்த ஒரு பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் எதிர்பாராதவிதமாக மணிகண்டனும், பிரனேசும் மூழ்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.
அந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய மணிகண்டன், பிரனேஷ் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் இறந்து இருந்தது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த மணிகண்டன், பிரனேஷ் ஆகியோரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சச்சின் (11). இவன் வடக்கனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று தனது அக்காள் பிரியங்காவுடன் கச்சிராயப்பாளையத்தில் உள்ள கோமுகி ஆற்றுக்கு குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக சச்சின் தண்ணீரில் மூழ்கினான். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், சச்சின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.