கல்வராயன்மலை பகுதியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் 4 பேர் கைது
கல்வராயன்மலை பகுதியில் உள்ள வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இவைகளை வேட்டையாட சிலர் நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்–இன்ஸ்பெக்டர்கள் கரியாலூர் திருமால், கச்சிராயப்பாளையம் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கல்வராயன்மலையில் உள்ள மேல்முந்தியூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 26), மணி(30) மற்றும் புலுவப்பாடியை சேர்ந்த ராஜீவ்காந்தி(27), மூக்குத்தியான்(60) ஆகியோரது வீடுகளுக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அதில் ஏழுமலை உள்பட 4 பேரின் வீடுகளிலும் தலா 2 நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 8 நாட்டு துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஏழுமலை உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் வில்வெத்தி கிராமத்தை சேர்ந்த சின்னையன் என்பவரின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சின்னையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:– கல்வராயன்மலை பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பலர் நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. அப்படி யாரேனும் பதுக்கி வைத்திருந்தால் அந்த நாட்டு துப்பாக்கிகளை அவர்களாகவே உடனே போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், கல்வராயன்மலை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.