டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.64 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
கோட்டூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.64 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி வருகின்றனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மறவாதி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). இவர் சித்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு ரூ.3 ஆயிரத்தை கடையில் வைத்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்து மேற்பார்வையாளர் நாகராஜூக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாகராஜ், டாஸ்மாக்கடைக்கு வந்து பார்த்த போது 12 பெட்டிகளில் இருந்த ரூ.64 ஆயிரத்து 480 மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
வலைவீச்சுஇதுகுறித்து நாகராஜ் பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி வருகின்றனர்.