அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் இரவில் உள்ளிருப்பு போராட்டம்


அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் இரவில் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2017 4:15 AM IST (Updated: 8 Oct 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியின் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகலூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் படித்து வருகின்றனர். கல்லூரியின் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 60 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கு நேற்று இரவு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறி விடுதி மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாப்பாடு, குழம்பு மற்றும் காய்கறிகள் தரமற்ற முறையில் சமைத்து மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறினர். உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என கூறி சமைக்கப்பட்ட உணவுகளை நுழைவு வாயிலுக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் விடுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து விடுதி காப்பாளரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக புதிய உணவை சமைத்து தர ஏற்பாடு செய்வதாகவும் கூறி மாணவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து சமரசம் செய்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து விடுதிக்குள் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

Next Story