பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் – தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.இதன் காரணமாக கல்யாணில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் கல்யாண் – தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.
இந்த ரெயில்கள் கல்யாண் – தானே இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்கும். தானேயில் இருந்து முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர் குர்லா, தாதர், பைகுல்லா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.08 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. – சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே காலை 11.40 மணி முதல் மாலை 4.40 மணி வரையும், சுன்னாப்பட்டி, பாந்திரா – சி.எஸ்.எம்.டி. இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையும் பராமரிப்பு பணி நடக்கிறது.
இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெல் செல்லும் ரெயில்கள் காலை 11.34 மணி முதல் மாலை 4.47 மணி வரையும், பாந்திரா, அந்தேரி செல்லும் ரெயில்கள் காலை 9.56 மணி வரையும் மாலை 4.43 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பன்வெல், பேலாப்பூர், வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ரெயில்கள் காலை 9.53 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரையும், பாந்திரா, அந்தேரியில் இருந்து சி.எஸ்.எம்.டி. வரும் ரெயில்கள் காலை 10.45 மணி முதல் மாலை 5.09 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளனஇருப்பினும் பராமரிப்பு பணியின் போது பன்வெல் – குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.