வீட்டில் தனியாக இருந்த தாய், மகளிடம் கழுத்தில் கத்தியை வைத்து முகமூடி கொள்ளை


வீட்டில் தனியாக இருந்த தாய், மகளிடம் கழுத்தில் கத்தியை வைத்து முகமூடி கொள்ளை
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளிடம் கழுத்தில் கத்தியை வைத்து 13 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை வைத்திலிங்கம் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(வயது 38). இவருடைய மனைவி சாமூண்டீஸ்வரி (வயது 28). முருகன் பிரான்ஸ் நாட்டில் வேலைபார்த்து வருவதால் சாமூண்டீஸ்வரி 2 குழந்தைகள் மற்றும் தனது தாய் மாலாவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 5–ந் தேதி குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விட்டு கதவை திறந்து வைத்து சாமூண்டீஸ்வரி டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது இரவு 7 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் முகமூடி அணிந்தபடி சாமூண்டீஸ்வரியின் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டார். மற்ற 3 பேர் முருகனின் வீட்டிற்கு சென்றனர். இதனை பார்த்த உடன் சாமூண்டீஸ்வரியும், அவரது தாயார் மாலாவும் நீங்கள் யார் என்று கேட்டனர். அதற்குள் அவர்களது கழுத்தில் அந்த ஆசாமிகள் கத்தியை வைத்து நகைகளை கழற்றித் தருமாறு கேட்டனர். உடனே பெண்கள் இருவரும் உதவி கேட்டு சத்தம் போட முயன்றனர். அப்போது அந்த ஆசாமிகள் சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். ஆனாலும் நகைகளை தர அவர்கள் மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் சாமூண்டீஸ்வரி, மாலாவை சராமாரியாக தாக்கினர். அவர்கள் அணிந்திருந்த 13 பவுன் நகைகள், பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாமூண்டீஸ்வரி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் சாமூண்டீஸ்வரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 முகமூடி கொள்ளையர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்கள் யார்? புதுச்சேரியைச் சேர்ந்தவர்களா? அல்லது வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து கொள்ளை அடித்துச் சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த தாய், மகளிடம் கழுத்தில் கத்தியை வைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story