கிரண்பெடியின் முயற்சி பலிக்காது இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
புதுச்சேரியில் பா.ஜ.க.வை வளர்க்கும் கிரண்பெடியின் முயற்சி பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2016–ல் 490 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
புதுவையில் வில்லியனூர், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, அய்யங்குட்டிபாளையம், டிவி நகர், வாழைக்குளம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அரசும், கவர்னரும் லாவணி பாடுகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புயல் வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
அரசு அதிகாரிகள் யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் தவிப்பதும் டெங்கு அதிகரிப்புக்கு இன்னொரு காரணம். இதுமட்டுமின்றி அரசு நிர்வாகத்திலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியின் வளர்ச்சி மேலும் பின்னோக்கி செல்லும் சூழல் உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு தரப்படும் நிலவேம்பு கசாயம் போதிய அளவு கையிருப்பு இல்லை. போலியோவைப் போல் அனைத்து தரப்பு மக்களிடமும் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
புதுச்சேரி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பிரிவில் போதிய ஆட்கள் இல்லை. 4 பிராந்தியங்களிலும் சேர்த்து ஒற்றை இலக்கத்திலேயே ஆட்கள் உள்ளனர். கவர்னருக்கு எதிராக அமைச்சர் கந்தசாமி போராட்டம் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அவரது இந்த அறிவிப்பால் அமைச்சர் திறமையற்றவராக இருக்கிறார் என மக்கள் கருதுகின்றனர்.
புதுவையில் பா.ஜ.க.வை வளர்க்க கிரண்பெடி முயற்சிக்கிறார். இதற்காக கவர்னர் மாளிகையை அரசியல் அலுவலகமாக பயன்படுத்துகிறார். இது புதுச்சேரியில் பலிக்காது. இடசாரிகள் அதை தடுத்து நிறுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சலீம் ஆகியோர் உடன் இருந்தனர்.