அடுக்கடுக்கான புகார்களை பட்டியலிட்டு கவர்னர் கிரண்பெடிக்கு, அமைச்சர் கந்தசாமி கடிதம்
புதுவை கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகளை வெளிப்படையாக அமைச்சர் கந்தசாமி விமர்சனம் செய்து வருகிறார்.
புதுச்சேரி,
அதேபோல் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. ஒத்துழைப்பும் அளிப்பது இல்லை என்றும் பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி மீது புகார்களை பட்டியலிட்டு கடிதம் ஒன்றை அவர் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அரசின் எந்தவித உத்தரவுகளும், ஆலோசனைகளும் ரகசிய காப்பு மற்றும் அமைச்சரவை துறையின் மூலமாகத்தான் ஆணையிட முடியும். ஆனால் நீங்கள் (கவர்னர்) நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் உலகம் அறியும்படி உத்தரவிடுகிறீர்கள். அலுவல் முறைகளை பின்பற்றுவதில்லை.
அதேபோல் இலவச அரிசி திட்டம், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு முழுகல்வி கட்டண உதவித்தொகை, விவசாயிகளுக்கு கூட்டுறவு விவசாயக்கடன் தள்ளுபடி, துறைமுகம் தூர்வாரும் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் உத்தரவிடுகிறீர்கள். அரசு செயலர்கள், அதிகாரிகளை மிரட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள்.
தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறீர்கள்.
எனவே உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு அரசாங்கத்திற்கு வழி செய்து நிர்வாகத்தில் ஒழுக்கத்தை கடைபிடித்து மக்கள் நலன்கருதி அனைத்து கோப்புகளுக்கும் ஒப்புதல் அளித்தால் நான் உங்களை சந்திப்பேன். தவறுகளை திருத்திக்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்காவிட்டால் 2 மாதத்தில் பாராளுமன்றம் முன்பு உங்களை கண்டித்து போராட முடிவு செய்து இருப்பதில் இருந்து பின்வாங்கமாட்டேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.