ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி உத்தவ் தாக்கரே கருத்து
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பற்றி கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘‘மக்கள் சக்தி முன்பு ஆணவமிக்க தலைவர்கள் ஆதரவின்றி நிற்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
மும்பை,
சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி) சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை வாட்டி வதைத்ததால், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, இதில் சில மாற்றங்களை கொண்டு வர ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–வரிச்சுமை காரணமாக நாடு அமைதி இழந்துவிட்டது. மக்கள் சக்தி முன்பு ஆணவமிக்க தலைவர்கள் தலைகுனிய நேரிட்டது. பொதுமக்கள் மனதில் தீ பற்றி எரிவதை உணர்ந்ததும், அவர்கள் (அரசு) ஆதரவின்றி தவிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரியை குறைத்த பின்னர், சாமானிய மக்களுக்காக அரசு ஏதாவது செய்ய வேண்டும். பணவீக்கம், எரிபொருட்களின் விலையையாவது குறைக்கலாம்.
நாட்டில் தீபாவளி கொண்டாட்டம் நெருங்குகிறது. இதையொட்டி, மக்கள் ‘லட்சுமி பூஜை’ செய்வது வழக்கம். ஏற்கனவே வரி மேல் வரி விதித்து மக்களிடம் இருந்து அரசு கொள்ளையடித்து விட்டதால், அவர்களிடம் மிகவும் குறைவான லட்சுமியே (பணம்) இருக்கிறது.ஜி.எஸ்.டி. குறைப்பு என்பது தீபாவளி பரிசு என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாக அப்படி இல்லை. இதுநாள் வரை வசூலித்த அதிகப்படியான பணத்தை பொதுமக்களிடம் அரசு திரும்ப செலுத்துமா?.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Related Tags :
Next Story