மேச்சேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை பலி பொதுமக்கள் பீதி
மேச்சேரி அருகே, மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை பலியானாள். இந்த பகுதியில் ஒரே வாரத்தில் 3 பேர் மர்ம காய்ச்சலுக்கு இறந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் மைதிலி (வயது 4). இவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 4 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தாள்.
இந்த நிலையில் காய்ச்சல் அதிகமானதால் மைதிலி மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மைதிலி நேற்று இறந்து விட்டாள்.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் மேச்சேரி அருகே அரங்கனூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகள் சத்தியஸ்ரீ (3), சொரையனூர் காட்டுவளவை சேர்ந்த பழனிசாமி மகன் கவிஆனந்த் (9) ஆகியோர் மர்ம காய்ச்சலுக்கு இறந்த நிலையில், தற்போது மைதிலியும் மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ள சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.