மர்ம காய்ச்சலுக்கு சிறுமிகள் உள்பட 3 பேர் பலி


மர்ம காய்ச்சலுக்கு சிறுமிகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2017 10:00 AM IST (Updated: 8 Oct 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், ஜோதிடர். இவருடைய மனைவி கவிதா.

வாழப்பாடி,

இவர்களுக்கு தினகரன் (வயது 11) என்ற மகனும், கிருத்திகா (13) என்ற மகளும் இருந்தனர். கிருத்திகா நாமக்கல் மாவட்டம் ஆலிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து கிருத்திகாவை அவருடைய பெற்றோர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாணவி கிருத்திகா பரிதாபமாக இறந்தாள். மாணவி மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திருமனூர் பகுதியில் இதுவரை மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமலூர் அருகே உள்ள கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் தரணி (17). இவர் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தரணி தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று தரணியை அவருடைய பெற்றோர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

எடப்பாடி அருகே உள்ள நாச்சிப்பாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (32), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சத்தியபிரியா (27). இவர்களுக்கு பூஜா (5) என்ற மகளும், தரண் (3) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சத்தியபிரியா கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சத்தியபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story