பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 8 Oct 2017 5:09 AM IST (Updated: 8 Oct 2017 5:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பீகாரை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 3–ந் தேதி போன் செய்து பேசிய ஒருவர், ‘பாகலூர் கிராசில் செல்லும் மர்மநபர் பையில் வெடிகுண்டு வைத்துக்கொண்டு கெம்பேவுடா விமான நிலையத்தை நோக்கி செல்கிறார். அங்கு வெடிகுண்டை வெடிக்க செய்ய உள்ளார்‘ என கூறிவிட்டு உடனடியாக போன் இணைப்பை துண்டித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பாகலூர் கிராஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பாகலூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக மர்மநபர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, யாரிடமும் வெடிகுண்டு இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வரும் பீகாரை சேர்ந்த சிக்கந்தர் சகானி(வயது 30) என்பவர் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story