தேவையில்லாத விருந்து நிகழ்ச்சிகளில் தான் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்
பார்வையாளரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய விதமாக கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு கழக தலைவி கருத்து தெரிவித்து பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
பார்வையாளரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய விதமாக கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு கழக தலைவி கருத்து தெரிவித்து பதில் அளித்துள்ளார். ‘தேவையில்லாத விருந்து நிகழ்ச்சிகளில் தான் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்‘ என்று அவர் கூறினார்.
கர்நாடகத்தில் பெண்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்தில் கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது. இது, கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கழகத்தின் தலைவியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாரதி சங்கர் உள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாரதி சங்கர் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. இந்த வேளையில், பார்வையாளரின் கேள்விகளுக்கு பாரதி சங்கர் பதில் அளித்தார். அப்போது, ‘பெண்களுக்கான அதிகாரமும், பெண்களுக்கான பாதுகாப்பும் சமமாக உள்ளதா?. பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் என்ன?‘ என ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்கு பாரதி சங்கர் பதில் அளிக்கையில், ‘பெண்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் ஏதேனும் திருவிழாக்களுக்கு சென்றால் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்களா?. இல்லை. அவர்கள் தங்களுக்கு தேவையில்லாத விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தான் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்‘ என்றார்.மேலும், பெண்கள் பாதுகாப்பு பிரச்சினையை குப்பை தரம் பிரிப்புடன் ஒப்பிட்ட அவர், சமூக பிரச்சினைக்கு அரசை குற்றம்சாட்டக்கூடாது எனும் நோக்கத்தில் பதில் கூறுகையில், ‘குப்பை பிரச்சினை நிலவுவதால் பொதுமக்களில் ஒருவராக நான் கண்டிப்பாக குப்பைகளை முதலில் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். இதை நான் செய்யாமல் குப்பை பிரச்சினை நிலவுவதாக கூறி அது சம்பந்தப்பட்ட துறை, கவுன்சிலர்கள் ஆகியோரை குற்றம்சொல்லி என்ன பயன்?‘ என்றார்.
பெண்கள் பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு வாரிய தலைவி பாரதி சங்கர் கூறிய இந்த கருத்தும், பதிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.